

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 3 போலீஸார் உட்பட 12 பேர் பலியாயினர். 36 பேர் காயமடைந்தனர்.
காபுல் நகரில் இயங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கானோர் மாலைநேர வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது.
பின்னர் பயங்கர ஆயுதங் களுடன் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி னர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று பதில் தாக்குதல் நடத்தி னர். சுமார் 9 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை நேற்று அதிகாலையில் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து அந்நாட்டு உள் துறை அமைச்சக செய்தித் தொடர் பாளர் சித்திக்கி கூறும்போது, “பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதி கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 7 மாணவர்கள், 3 போலீஸார் மற்றும் 2 பாது காவலர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பலியாயினர். 9 போலீஸ் அதிகாரிகள் உட்பட 36 பேர் காய மடைந்தனர். மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. எனினும், தலிபான் தீவிரவாத அமைப்பினர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பலி யானவர்களின் குடும்பத்தின ருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.