

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவை (3 வயது, பேச்சுக் குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும், சில மணிநேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர். ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் வெஸ்லியின் மனைவி சினி விடுவிக்கப்பட்ட நிலையில், ஷெரின் மரணத்துக்கு மூல காரணமாக இருந்த வெஸ்லி மேத்யூ மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் உலக அளவில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்ற இந்த வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்ட வெஸ்லி மேத்யூவுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பிறகே அவர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வெஸ்லி மேத்யூஸுக்கு இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் எனினும் அவர் நீதிபதிகளின் தீர்ப்பை மதிக்கிறார் என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.