பல மாதங்களாக சம்பளம் தராமல் கொடுமை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் 300 இந்தியர்கள்

பல மாதங்களாக சம்பளம் தராமல் கொடுமை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் 300 இந்தியர்கள்
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டாகவே கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி வரும் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

இங்கு பணியாற்றி வரும் இந்தியர்கள் பெரும்பாலும் குடும்பத்தை சொந்த ஊரில் விட்டு விட்டு இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு தேவையான இருப்பிடம் மற்றும் உணவு வழங்கும் பொறுப்பையும் அந்த நிறுவனமே ஏற்றிருந்தது. ஆனால் சிலருக்கு 5 மாதங்களும், வேறு சிலருக்கு 3 மாதங்களும் சம்பளம் வழங்கவில்லை.

மேலும் உணவு உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. சம்பளத்தை பெற வேண்டும் என்பதால் பலரும் அங்கேயே தங்கியுள்ளனர். இவர்களில் பலரது விசா முடிவடைந்து விட்டது. அவர்கள் அங்கு தங்கி இருக்க புதிய விசா வழங்கவும் அந்த நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சம்பளம் கிடைக்காமல், சரியான உணவின்றி, விசா இல்லாததால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு  தங்கள் அவலநிலையை எடுத்துரைத்துள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக இந்திய தூதரகம் உறுதி அளித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்திடம் விசாரித்தபோது, போதிய வர்த்தகம் நடைபெறாததால் நிதிநிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in