Last Updated : 28 Jun, 2019 11:16 AM

 

Published : 28 Jun 2019 11:16 AM
Last Updated : 28 Jun 2019 11:16 AM

தீவிரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஜி 20 மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு

தீவிரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. அப்பாவி மக்களை மட்டும் கொன்று பொருளாதார மேம்பாடு, சமூக நிலைத்தன்மையையும் குலைத்துவிடுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சின்ஷே அபே, ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஒவ்வொரு தலைவர்களுடனான சந்திப்பிலும் இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு , வர்த்தகம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசியதாக பிரதமர் அலுவலகம் செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தலைவர்களுடன் பிரதமர் மோடி அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

''நாம் உடனடியாக உலக வர்த்தக அமைப்பை வலுப்பெறச் செய்வது அவசியம். வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியில் இருந்து உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பது, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒன்றாகச் சேர்ந்து எதிர்த்தல் ஆகியவை முக்கியமானது. .

நான் 3 முக்கிய சவால்கள் மீது கவனம் செலுத்தப்போகிறேன். முதலாவதாக சரிந்து வரும், நிலையற்ற நிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரம்.

ஒரு தலைபட்சமான முடிவுகள், போட்டி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக முறை மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதும்,  மற்றொரு பக்கம் போதுமான அளவில் முதலீடுகள் இல்லாததும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நமக்கு  1.30 லட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படுகிறது. வளர்ச்சியும், மேம்பாடும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கமின்றி சீராக நிலைக்க வேண்டும். இது 2-வது பெரிய சவாலாக இருக்கிறது.

அதிகவேகமாக மாறிவரும் தொழில்நுட்பம், டிஜிட்டல் முறை, பருவநிலை மாற்றம் ஆகியவை மீது நாம் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரும் அக்கறை செலுத்த வேண்டும்.

தீவிரவாதம் இன்று மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிரைக் கொல்வதோடு, பொருளாதார வளர்ச்சியிலும் சமூக நிலைத்தன்மையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

தீவிரவாதம், இனவாதம் ஆகியவற்றுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளிப்பதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சவால்களை சமாளிக்க, பிரிக்ஸ் நாடுகளுடையே ஒற்றுமையும், கூட்டுறவும் இருந்தால் தீர்வு காண முடியும்.

பொருளாதார வளர்ச்சிக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை குறைந்த விலையில் கிடைக்குமாறு செய்ய வேண்டும். நிலைத்த அனைவருக்குமான வளர்ச்சிக்கு புதிய மேம்பாட்டு வங்கி உறுப்பு நாடுகளின் முதலீட்டுக்கும், சமூகக் கட்டமைப்புக்கும், புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x