Published : 22 Sep 2018 09:51 AM
Last Updated : 22 Sep 2018 09:51 AM

உலக மசாலா: பின்தொடரும் வாத்துகள்!

தென் கொரியாவின் சியோல் நகரில் வசிக்கும் ஒருவரை, 21 வாத்துக் குஞ்சுகள் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், தாயைத்தான் பின்தொடரும். ஆனால், மனிதரைப் பின்தொடர் வதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியமடைகிறார்கள். சமீபத்தில் இந்த மனிதர் தன்னைப் பின்தொடரும் வாத்துக் குஞ்சுகளைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார். “நான் 21 வாத்து முட்டைகளைப் பொரிக்க வைத்தேன். ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர சிரமப்பட்ட குஞ்சுகளுக்கு ஓடுகளை உடைத்து, உடலைத் தடவி கொடுத்து, பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன். முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த வுடன் என்னைப் பார்த்ததாலோ என்னவோ அத்தனை வாத்துக் குஞ்சுகளும் நான் சொல்வதைக் கேட்கின்றன. நான் எங்கே சென்றாலும் பின்னாலேயே வருகின்றன. வீட்டில்தான் இப்படி என்று காட்டுக்குள் சென்றேன். அங்கும் இவை என்னுடனே வந்துகொண்டிருந்தன. நான் நின்றால் அவையும் நின்றன. ஓரிடத்தில் அமர்ந்து, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினேன். அனைத்தும் ஆனந்தமாகக் குடித்தன. நான் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தேன். உடனே தண்ணீர் கூடக் குடிக்காமல் என் பின்னால் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வழியே வந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பறவைகளை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவை எல்லை இல்லாமல் சுதந்திரமாக வாழக் கூடியவை. அவற்றை ஓரிடத்தில் அடைத்து வைப்பது சரியில்லை. அதனால் இன்னும் சற்று வளர்ந்தவுடன், போதுமான பயிற்சி கொடுத்து காட்டில் விட்டுவிடப் போகிறேன். அப்போது இவற்றால் காட்டில் தாக்குப் பிடிக்க முடியும். இங்கே வாருங்கள், கிளம்பலாம் போன்ற கட்டளைகளை இவை புரிந்துகொண்டு செய்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் இவர்.

நாய்க்குட்டியைப்போல, பின்தொடர்கின்றனவே இந்த வாத்துகள்!

சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் 50 வயது கு, 73 கல்யாண உடைகளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண்களின் திருமண உடைகளை ஏன் திருடியிருக்கிறார் என்று கேட்டதற்கு, விவாகரத்துப் பெற்ற தனக்கு மீண்டும் திருமணம் செய்யும் ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக உடைகளை எடுத்தேன் என்கிறார். ஷாங்காய் நகரில் உள்ள மொத்த வியாபாரிகள், தங்கள் கடைகளில் துணிகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்திருக்கிறார். கடந்த வாரம் 8 விலை மதிப்பு மிக்க உடைகளைக் காணவில்லை என்று ஒரு பெண் புகார் கொடுத்தார். கண்காணிப்பு கேமராவில் கு எடுப்பது தெரிய வந்தது. உடனே பிடித்துவிட்டனர். தான் திருடன் இல்லை என்றும் இந்த உடைகளை விற்றுப் பணம் பெறுவது தன்னுடைய நோக்கம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதுவரை இவர் எடுத்த 73 உடைகளின் மதிப்பு 6.8 லட்சம் ரூபாய். இவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொல்லிவிட்டதால், கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு காரணமா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x