Last Updated : 20 Sep, 2018 10:19 PM

 

Published : 20 Sep 2018 10:19 PM
Last Updated : 20 Sep 2018 10:19 PM

59% தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா, பாக். உள்பட 5 நாடுகளில் நடந்துள்ளன: அமெரிக்க அறிக்கையில் பகீர் தகவல்

 2017-ம் ஆண்டில் பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளில் நடந்துள்ளன என்று அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் இன்று வெளியிட்டார்.

அது குறித்து அவர் கூறியதாவது:

''கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் 59 சதவீதம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 5 ஆசிய நாடுகளில் நடந்துள்ளன. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது, கடந்த 2017-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் எண்ணிக்கை அளவு குறைந்திருக்கிறது.

ஈராக்கில் தீவிரவாதத் தாக்குதல்களும், அதனால் நடக்கும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. கடந்த 2017-ம் ஆண்டில் 100 நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. தீவிரவாதிகள் பூகோள ரீதியாக கவனம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 59 சதவீதம் ஆசிய நாடுகளில் நடந்துள்ளன. இந்த 5 நாடுகளில் நிகழ்ந்த இயற்கை மரணங்கள் தவிர்த்து மற்ற மரணங்களில் 70 சதவீதம் தீவிரவாதத் தாக்குதலில் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியாவும் அடக்கம்.

சர்வதேச அளவில் தீவிரவாதத் தடுப்பு குறித்து பல்வேறு நாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சட்டங்களை வலுப்படுத்தி வருகிறோம். விமானப் போக்குவரத்து பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறோம். தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம். இதன் காரணமாக 2017-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல்கள் குறையத் தொடங்கி இருக்கின்றன.

தீவிரவாதச் செயல்களுக்கு உள்நாட்டவர்களைத் தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து ஐஎஸ் அமைப்பினரால் ஈர்க்கப்பட்டு தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். பமாகோ, பார்சிலானோ, பெர்லின், லண்டன், மராவி, நியூயார்க் நகரம், உகாடோகுவு உள்ளிட்ட நகரங்கள் தீவிரவாதக் குழுக்களின் பார்வையாக இருக்கிறது. உலக அளவில் தீவிரவாதத்தைப் பரப்பி வரும் நாடாக தற்போது ஈரான் இருந்து வருகிறது''.

இவ்வாறு சேல்ஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x