Published : 11 Sep 2018 01:06 PM
Last Updated : 11 Sep 2018 01:06 PM

‘‘இந்தியா தொல்லை தாங்கவில்லை; கெடுபிடி செய்தாலும் கெஞ்சுகிறார்கள்’’- ட்ரம்ப் சவால் பேச்சு

 அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளபோதிலும், இந்தியா தங்களுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து சீனப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்தது.

அதுபோலவே ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கான வரியை ட்ரம்ப் உயர்த்தினார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிக்கான வரியை ஐரோப்பிய நாடுகள் உயர்த்தின.

அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியாவும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு எதிராக மற்ற உலக நாடுகள் அணி திரளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, உலகளாவிய வர்த்தகப் போராக மாறியுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் வர்த்தக மோதல் குறித்து ட்ரம்ப் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

‘‘இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவை பேணி வருகிறது. இருந்தாலும், வர்த்தக விஷயத்தில் அமெரிக்காவின் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுப்பதில்லை. பல ஆண்டுகளாக அவர்களுக்கு வரி சலுகை அளித்து விட்டோம். இனிமேலும் இந்த தவறை செய்ய மாட்டோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு நாங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம்.

ஆனாலும், அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யவே விரும்புகிறார்கள். இந்தியாவில் இருந்து சமீபத்தில் கூட அவர்கள் அழைத்து பேசினார்கள். வர்த்தகம் செய்ய விரும்புவதாக கூறினார்கள். ஆனால் நாங்கள் அவசரப்படவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்து வருகிறோம். நாம் மறுத்தாலும் கூட அவர்கள் நம்முடன் வர்த்தகம் செய்யவே விரும்புகிறார்கள். உடனடியாக முடிவு ஏதும் நாம் எடுக்கவில்லை.

முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் பல நாடுகளிடமும், அமெரிக்கா தனது உரிமையை விட்டுக் கொடுத்தது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் வர்த்தகம் செய்தார்கள். தற்போது அந்த சூழல் இல்லை. ஏனென்றால் இப்போது அதிபராக இருப்பது ட்ரம்ப். மற்ற நாடுகளின் சாதுர்யங்கள் எதுவும் ட்ரம்பிடம் பலிக்காது.

இந்தியாவில் இருந்து மோடி வந்தாலும் சரி, ஜப்பானில் இருந்து ஷின்சோ அபே வந்தாலும் சரி அவர்களை நான் வரவேற்கிறேன். அவர்களுடன் நட்பு பாராட்டுகிறேன். அது வேறு விஷயம். ஆனால் வர்த்தகத்தில் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என ட்ரம்ப் கூறினார்.

இருப்பினும், இந்தியா தரப்பில் அமெரிக்காவிடம் யார் பேசினார்கள் என விவரத்தை ட்ரம்ப் வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x