Published : 29 Sep 2018 08:59 AM
Last Updated : 29 Sep 2018 08:59 AM

தெற்காசியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம்: சார்க் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா புகார்

தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரே மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளது என்று சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமுது குரேஷி மற்றும் ஆப்கானிஸ்தான்,  வங்கதேசம், பூடான், இலங்கை மாலத்தீவு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது: தெற்காசியாவில்  பொருளாதார வளர்ச்சி மக்களின் முன்னேற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு அமைதியும் பாதுகாப்பான சூழலும் மிகவும் முக்கியம். ஆனால் தெற்காசியாவிலும் உலகிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரே மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளது.

உலகம் தற்போது மிகவும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை நோக்கிச் செல்கிறது. மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து  எளிதாகி வருகிறது.

தெற்காசியாவில் வர்த்தக வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. தெற்காசிய தடையற்ற வர்த்த உடன்பாடு மற்றும் சார்க் வர்த்தக உடன்பாட்டின் அடிப்படையில் வர்த்தகத்தை மேலும் தாராளமயமாக்குவது அவசியம். எரிசக்தி ஒத்துழைப்புக்கான சார்க் உடன்பாட்டில் சில உறுப்பு நாடு கையெழுத்திடாததால் அது இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தியா தனது பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலன்களைத் தெற்காசிய சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளது. இவ்வாறு சுஷ்மா கூறினார்.

பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டம்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தை முன்னிட்டு பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்

பிரிக்கா) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “வடகொரியா - பாகிஸ்தான் இடையிலான நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான இந்தியாவின் கவலையும் தீர்க்கப்பட்டால் மட்டுமே கொரிய தீபகற்ப பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என இந்தியா நம்புகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x