உலக மசாலா!

உலக மசாலா!
Updated on
1 min read

தரையில் மராத்தான் போட்டிகளைப் பார்த்திருக்கிறோம். படிகளில் மராத்தான் போட்டி சீனாவில் நடைபெற்றது! வேர்ல்டு சமிட் விங் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம் போட்டியாளர்களும் 24 ஓட்டப் பந்தய வீரர்களும் கலந்துகொண்டனர்.

330 மீட்டர் உயரமும் 84 தளங்களும் 2041 படிகளும் கொண்ட இந்தக் கட்டிடத்தை 10 நிமிடங்களில் கடந்து முதலாவதாக வந்தார் போலந்து நாட்டு வீரர். 11 நிமிடங்களில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை.

ஓட்டல்ல ஓட்டமா? எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க!

ஒரு கார் பறந்து செல்வதைக் கண்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! லண்டன் வாசிகளும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்! காரை ஒரு ஹெலிகாப்டர் இழுத்துச் செல்வது பிறகே தெரிந்தது.

ஜாக்குவார் நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்போர்ட்ஸ் காரை விளம்பரப்படுத்துவதற்காக, காரைப் பறக்கவிட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் எதிர்பார்த்ததை விட அதிகமாக விளம்பரம் அந்த காருக்குக் கிடைத்துவிட்டது!

க்கும்… நம்ம ஊர்ல பெட்ரோல் விலை பறக்கிறதை அவங்க பார்த்திருக்கணும்…

இது இப்படி இருக்க… 5 வயதான மில்லிக்கு அடிக்கடி வயிற்று வலி. துடித்துப் போன தாய் லிசா, இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தார். மில்லியின் வயிற்றில் மிகப் பெரிய முடிப் பந்து இருப்பது தெரியவந்தது. தன்னுடைய நீண்ட கூந்தலில் இருந்து முடிகளை வெட்டி திங்கும் நோய்தான் ராபுன்ஸெல் சிண்ட்ரோம். வெகு அரிய வகை நோய். உலகம் முழுவதுமே 27 பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆறுதல். முடி விழுங்கிய மில்லி, அறுவை சிகிச்சைக்குப் பின் குட்டை முடியுடன் நலமாக இருக்கிறார். க்ரிம் பிரதர்ஸ் எழுதிய நாடோடிக் கதையில் வரும் ஓர் இளவரசி ராபுன்ஸெல். இவருக்கு மிக மிக நீளமான கூந்தல் இருக்கும். அங்கு இருந்துதான் இந்த சிண்ட்ரோமுக்கு இந்தப் பெயர் வந்தது!

பெயருக்கெல்லாம் எப்படி மெனக்கெடுறாங்க பாருங்க!

கனவு காணாமல் யாராவது இருக்க முடியுமா? ஆனால் எல்லா கனவுகளும் நிறைவேறி விடுகிறதா என்ன? வெரா அப்ருஸ்ஸி வித்தியாசமானவர். தன்னுடைய கனவுகள். ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வந்திருக்கிறார்! 80 வயதில் மிகப் பெரிய ட்ரக் வண்டியை ஓட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 97 வயதில் அந்தக் கனவு நிறைவேறிவிட்டது! 18 சக்கரங்கள் கொண்ட பெரிய ட்ரக்கை நியு ஜெர்ஸியில் ஓட்டி சாதனை படைத்திருக்கிறார். 70 அடி நீளமுள்ள ட்ரைக்கை ஓட்டுவதற்கு டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி எடுத்திருக்கிறார் இந்தப் பாட்டி!

அடுத்த கனவு விமானம் ஓட்டுவதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in