Published : 11 Sep 2018 01:43 PM
Last Updated : 11 Sep 2018 01:43 PM

தற்கொலை எண்ணம் ஏற்படுவது எதனால்? யாருக்கு? - அதிர்ச்சி தரும் உலக சுகாதார நிறுவன ஆய்வு

உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு உலக அளவில் நடந்த தற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், கனடாவின் மனநல ஆணையத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்கொலை என்பது ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி பல தரப்பிலும் நடக்கிறது. எனினும் பெரும்பாலும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தான் அதிகஅளவில் தற்கொலைகள் நடக்கின்றன. 2016-ம் ஆண்டில் மட்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 15 வயது முதல் 29 வயது வரை உடையவர்கள் ஆவர்.

தற்கொலை செய்து கொள்பவர்கள் முதன்முறையே இதனை செய்து கொள்வதில்லை. 20 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கைவிட்ட நிலையிலும் பின்னர் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர்.

குடும்பம், நண்பர்கள், சமூகம் இவற்றில் ஏற்படும் இழப்புகள், எதிர்பார்ப்பு நிறைவேறாதது, அன்பு கிடைக்காதது போன்ற காரணங்கள் தற்கொலைக்கு முக்கியமாக அமைந்து விடுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்களில் 20 சதவீதம் குடிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் தற்கொலைக்கு மனநலமே முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும், மதுபோதை, போதை பொருட்கள் பயன்பாடு போன்றவையும் உயர் வருவாய் பிரிவினரின் தற்கொலைக்கு அதிகமாக உள்ளன. பல நாடுகளில் தற்கொலை குறித்த விழிப்புணர்வு இல்லை.

இதனை தடுப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அரசு அளவிலும், சமூக அளவிலும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வி, மனநல ஆலோசனை போன்றவற்றின் மூலம் தற்கொலையை பெரிய அளவில் தடுக்க முடியும்.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x