அமெரிக்கா முன்னெப்போதை விடவும் பாதுகாப்பாக இருக்கிறது: ஐ.நா.வில் ட்ரம்ப் பேச்சுக்கு எழுந்த சிரிப்பலை.. தானும் சேர்ந்து சிரித்த விநோதம்

அமெரிக்கா முன்னெப்போதை விடவும் பாதுகாப்பாக இருக்கிறது: ஐ.நா.வில் ட்ரம்ப் பேச்சுக்கு எழுந்த சிரிப்பலை.. தானும் சேர்ந்து சிரித்த விநோதம்

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ஈரான் அதிபர் ரவ்ஹானியும் மோதி கொண்டது பிற நாட்டுத் தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ. நா. சபையின் 73வது கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களிடையே ட்ரம்ப் உரையாற்றினார்.

அப்போது ட்ரம்ப் பேசும்போது, ஈரானையும் கடுமையாக விமர்சித்ததுடன் அதன் அதிபர் ரவ்ஹானியை ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

டர்ம்ப்பின் 35 நிமிட உரையில் ஈரானின் அணுஆயுத சோதனை, மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை ஈரான் ஆதரிக்கிறது என்று ஈரானை தொடர்ந்து குற்றச்சாட்டுவதிலேயே தனது நேரத்தை செலவிட்டார்.

ட்ரம்ப் பேசியதாவது," ஈரான் தலைவர்கள் தங்கள் நாட்டில் குழப்பம் மற்றும் மரணங்களை விதைக்கின்றனர். அவர்கள் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளை விரும்புவதில்லை. தங்கள் நாட்டின் இறையாண்மை உரிமையும் மதிக்கவில்லை" என்றார்.

ஈரான் அதிபர் ரவ்ஹானி உரையாற்றும்போது,  "பன்முகத்தன்மையை எதிர்பது வலிமையல்ல. மாறாக அது அறிவுசார்ந்த பலவீனத்தின் அறிகுறியாகும்” என்று ட்ரம்பை விமர்சித்தார்.

மேலும் இந்த உரையாடலில் ட்ரம்ப் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளையும் விமர்சித்தார்.

அமெரிக்கா முன்னெப்போது இல்லாத அளவில் தற்போது பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்தார். இதற்கு கூட்டத்தில் இருந்த சிலர் சிரிக்க அதனை சற்றும் எதிர்பார்க்காத ட்ரம்ப் தானும் சிரித்து இவ்வாறான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் மற்றும் ரவ்ஹானியின் இந்த வார்த்தை மோதலால் கூட்டத்தில் கலந்து கொண்ட பிற நாட்டு தலைவர்கள் தர்ம சங்கடத்தில் தள்ளப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in