Published : 05 Sep 2014 12:58 PM
Last Updated : 05 Sep 2014 12:58 PM

அண்ணன் என்னை நடிக்க விடவில்லை!: சத்யா பேட்டி

ஆர்யாவின் தம்பி என்ற தோரணையுடன் அறிமுகமான சத்யா நடிப்பில், ‘நான்’ பட இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அமர காவியம்’ திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு சத்யாவின் நிலைமையே வேறு என்று கோலிவுட்டில் சூடாகப் பேச்சு கிளம்பியிருக்கும் நிலையில் அவர் அளித்த பேட்டி இது!

சத்யா சினிமாவுக்கான பெயரா?

ஆமாம்! எனது இயற்பெயர் ஷாகீர். என் ஃபிரெண்ட்ஸ் உட்பட எல்லாருமே என்னோட பேரை தப்பா உச்சரிச்சாங்க. அதனால சினிமாவுக்குப் பேரை மாத்தியே ஆகனும்னு முடிவு பண்ணினேன். இது அண்ணன் வெச்ச பெயர். அண்ணன் நடிக்க வந்தப்போ, சத்யான்னு பெயர் வெச்சுக்கலாம்னு ஆசைப்பட்டு அதை செலக்ட் பண்ணியிருக்கான் .

ஆனா இயக்குநர் ஜீவா சார், அண்ணனுக்கு ஆர்யான்னு பேர் வெச்சுட்டார். கமல் சார் நடிச்ச ‘சத்யா’ படமும், அதுல அவரோட கேரக்டரும் ஆர்யாவுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் நேசிச்ச பேரு எனக்குத்தான் கிடைக்கல நீயாவது வெச்சுக்கோன்னான். எனக்கும் சத்யாங்கிற பேர் ரொம்பப் பிடிக்கும் ஏன்னா அது என் நண்பன் ஒருத்தனோட பேர்.

அண்ணனின் வற்புறுத்தலால்தான் சினிமாவுக்கு வந்தீர்களா?

இல்லவே இல்ல. மறந்தும் நடிக்கிறேன்னு கிளம்பிடாதேடான்னு நான் கேட்குறதுக்கு முன்னாடி தடுத்ததே ஆர்யாதான். அவன் என்னைத் தடுத்ததுக்கு முழுக்க முழுக்க அவர் பட்ட கஷ்டங்கள்தான் காரணமா இருந்துச்சு. அவர் அறிமுகமான ‘உள்ளம் கேட்குமே’ முடிய அஞ்சு வருஷமாச்சு. ஒரு அடையாளம் கிடைக்கிறதுக்குள்ள அவருக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சு.

நானும் நடிக்கிறேனேன்னு சொன்னப்போ, அவன் வேண்டாம்ன்னு சொன்னதுக்குக் காரணம் என் ரியல் லைஃப் கேரக்டர். நான் அண்ணனைவிட ஜாலியான ஆள். செல்லமா வளர்ந்துட்டேன்.

‘சினிமான்னு வந்துட்டா, டே அண்ட் நைட் ஹார்டு ஒர்க் பண்ண வேண்டியிருக்கும். அதேமாதிரி கமிட்மெண்ட், டிசிப்ளின் கண்டிப்பா வேணும். இதெல்லாம் உன்னால முடியுமான்னு பார்த்துக்கோ’ன்னு சொன்னான். இது எல்லாத்துக்குமே கண் முன்னாடி நீயே ரோல் மாடலா இருக்கும்போது கண்டிப்பா நான் சொதப்ப மாட்டேன்னு சொல்லிட்டுத்தான் நடிக்க வந்தேன்.

காதல் டூ கல்யாணம், புத்தகம் இந்த இரண்டு படங்களும் நல்ல கதை, படமாக்கம் இருந்தும் ஏன் ரசிகர்களை கவரத் தவறிவிட்டன?

அண்ணணுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது. என்னோட முதல்படம் ‘காதல் டூ கல்யாண’த்துக்கு மணிரத்னம் சாரோட அசோசியேட்தான் இயக்குநர். யுவன் மியூசிக், திவ்யா ஸ்பாந்தனா ஹீரோயின்னு பெரிய டீம். பெரிய கார்ப்பரேட் தயாரிச்சாங்க. ஆனா இப்போ வரும் அப்ப வரும்னு அஞ்சு வருஷம் இழுத்தடிச்சாங்க. இடையில அட்டகத்தி, அப்புறம் நான் இந்த இரண்டும் எனக்கு வந்த படங்கள்தான்.

முதல் படம் ரிலீஸ் ஆகாத நிலையில இந்தப் படங்களை ஒப்புக்க முடியல.அப்புறம் புத்தகம் படத்தைத் தவறான நேரத்தில் வெளியிட்டாங்க. ஒரு அறிமுக ஹீரோ படத்தை, மாஸ் ஹீரோ படங்களோடு பொங்கலுக்கு வெளியிட்டால் என்னாகும்? அதுதான் என்னோட புத்தகம் படத்துக்கு நடந்தது. இத்தனைக்கும் ரொம்ப டீசெண்ட்டான படம் அது.

இது போன்ற தடைகள் இல்லாமல் வெளியாகும் அமர காவியம் உங்களுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

படம் பார்த்த அத்தனை பேரும் அப்படித்தான் சொல்றாங்க. அமர காவியத்துக்கு முன், பின் என்று சத்யா மாறிவிடுவான்னு சொல்றாங்க. நான் சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடியே ஜீவா சங்கர் எனக்குச் சொன்ன கதை.

ஷங்கர் சார் தயாரிப்பில் அதர்வா நடிச்சிருக்க வேண்டிய படம். நான் நேசிச்சதாலயோ என்னவோ என் மடியிலயே இந்தக் கதை வந்து விழுந்திருக்கு. டீன் ஏஜ் பசங்க, அவங்கள புரிஞ்சுக்கக்கூட நேரம் ஒதுக்காத அம்மா அப்பா இந்த ரெண்டு சைடையுமே இந்தப் படம் கண்டிப்பா உலுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x