

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், " ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டணை பெற்ற நவாஸ் ஷெரீப்பின் தண்டனையும், அவரது மகள் மரியம்மின் 7 ஆண்டு சிறைத் தண்டனையும் தற்காலிகமாக ரத்து செய்து இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் நவாஷ் ஷெரீப்பின் மனைவி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சிறையிலிருந்து இவர்கள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இத்தகைய தீர்ப்பை இஸ்லமாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அவருக்கும் அவரது மகளுக்கு சிறைத் தண்டனை மற்றும் 2 மில்லியன் பவுண்ட் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவாஸ் ஷெரீப் அரசியல் தொடர்பான பொது வாழ்வில் ஈடுபட தடை விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது அவரின் தண்டனையும், அவரது மகளின் தண்டனையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.