Published : 04 Sep 2014 11:22 AM
Last Updated : 04 Sep 2014 11:22 AM

இந்தியாவில் அல்-காய்தா கிளை: வீடியோ காட்சியில் அய்மான் அல்-ஜவாஹிரி தகவல்

இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தாவின் கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி அறிவித்துள்ளார்.

ஏ.கியூ.ஐ.எஸ். (Al-Qaeda in the Indian Subcontinent) என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய கிளையை, பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஆசிம் உமர் வழிநடத்துவார் என்று அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக 55 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அல்-காய்தாவின் ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் மீடியா வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் முதலில் அல்-காய்தாவின் நிறுவனர் பின்லேடன் தோன்றுகிறார். அதைத் தொடர்ந்து தென்மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு, இந்திய துணைக் கண்டம், ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளின் வரைபடங்கள் காட்டப்படுகின்றன. அதன்பின் அய்மான் அல்-ஜவாஹிரி வீடியோவில் பேசுகிறார். அவர் பேசியிருப்பதாவது:

அசாம், குஜராத், ஆமதாபாத், காஷ்மீர் மற்றும் மியான்மரில் வாழும் முஸ்லிம்களைப் பாது காக்க அல்-காய்தா ஜிகாதிகள் போரிடுவார்கள். நாங்கள் உங்களை மறக்கவில்லை. அநீதி, அடக்குமுறை, துன்புறுத்தல்களில் இருந்து உங்களை மீட்க அல்-காய்தா தொடர்ந்து போரிடும்.

இந்தியாவில் செயல்படும் ஜிகாதிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வர வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும். இதற்காக இந்தியா, மியான்மர், வங்கதேசத்தில் அல்-காய்தா கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பதற்றமான பகுதிகள்

அசாம் மாநிலத்தில் அண்மைக் காலமாக வகுப்பு கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. அங்கு வங்க தேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதேபோல் காஷ்மீர் பிரச் சினை, குஜராத் கலவரம் ஆகிய வற்றை கிளறி பதற்றமான அந்தப் பகுதிகளில் அல்-காய்தாவுக்கு ஆதரவு திரட்ட அல்-ஜவாஹிரி வலை விரித்திருப்பதாக புலனாய் வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல் மியான்மரில் ரோஹிங்கா இன முஸ்லிம் களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அப் பகுதி இளைஞர்களையும் அல்-காய்தாவுக்கு இழுக்க அல்-ஜவாஹிரி திட்டமிட்டுள்ளார்.

போட்டி தீவிரவாதம்

சிரியா, இராக்கில் செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படைக்கு சர்வதேச அளவில் நிதியுதவி குவிந்து வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்களும் அந்தப் படையில் சேர்ந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் அல்-காய்தாவுக்கு இருந்த செல்வாக்கை இஸ்லாமிக் ஸ்டேட் தட்டிப் பறித்துவிட்டது.

எனவே இழந்து வரும் செல்வாக்கை மீட்பதற்காக இந்தியா உட்பட பல்வேறு பகுதி களில் புதிய கிளைகள் தொடங் கப்பட்டிருப்பதாக அறிவித்து அல்-ஜவாஹிரி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக மேற் கத்திய ஊடகங்கள் தெரிவித் துள்ளன.

உளவுத் துறையிடம் அறிக்கை கோருகிறது மத்திய அரசு

அல்-காய்தாவின் அறிவிப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உளவுத் துறையிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் அல்-காய்தாவின் வீடியோ உண்மையானது என்பது தெரியவந்துள்ளது. எனவே அந்த அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹரி குறிப்பிட்ட பகுதிகளுக்கு உளவுத் துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் அல்-காய்தாவிலும் யாராவது இணைந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இன்னும் இரண்டு நாள்களில் மத்திய அரசிடம் உளவுத் துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அல்-காய்தா தலைவர் அல்-ஜவாஹிரியின் வீடியோ குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவரித்துக் கூறினார். பின்னர் அவர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தினார். குஜராத் உள்துறை வட்டாரங்கள் கூறியபோது, அல்-காய்தாவின் வீடியோ குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தன.

குஜராத் மட்டுமன்றி காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x