

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு ஜெனீவாவில் திங்கள் கிழமை தொடங்குகிறது. இதில் இலங்கை போர்க்குற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்த கடந்த ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஐ.நா. விசாரணையை ஏற்க மாட்டோம், ஐ.நா. குழுவி னருக்கு விசா வழங்கமாட்டோம் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தங்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை இலங்கைத் தூதர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாடு ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில் இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்தும் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத் ஆரியசின்ஹா கூறிய போது, இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் தகுந்த பதில் அளிப்போம் என்று தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் புதிய தலைவர் பிரின்ஸ் செயித் அல் ஹூசைன் தயார் செய்துள்ள ஐ.நா. போர்க்குற்றம் குறித்த அறிக்கை ஊடகங்களில் கசிந்துள்ளது. ‘போர்க்குற்றங்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும், ஐ.நா. குழுவினருக்கு விசா வழங்க வேண்டும்’ என்று செயித் அல் ஹுசைன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.