

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் புகழ்பெற்ற ஏரியில் நடந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100 -ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து தன்சானியா அதிகாரிகள் தரப்பில், "தன்சானியாவிலுள்ள ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஏரியான விக்டோரியா ஏரியாவில் வியாழக்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்ட படகு (ferry) வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது.
இந்தப் விபத்தில் பலியானோர் எண்ணிகை 100 -ஐ தாண்டியுள்ளது. அவர்களில் 54 பேர் பெண்கள், 40 பேர் ஆண்கள். அப்படகில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்று உறுதியாக தெரியவில்லை. 300 பயணிகள் வரை இருந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பயணிகளை தேடும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது” என்றனர்.
படகு விபத்து ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் அதிகப்படியான பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விபத்திலுருந்து தப்பித்தவர்களில் ஒருவர் கூறும்போது, ‘‘படகு கரையை அடையும்போது அதன் வாயில் பகுதியை நோக்கி பயணிகள் பலர் சென்றனர் இதன் காரணமாகவே படகு கவிழ்ந்திருக்கக் கூடும்” என்றார்.
சமீபத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட படகு விபத்தாக தான்சானியா விபத்து பார்க்கப்படுகிறது.