

ஜப்பானின் வடக்குப் பகுதி தீவான ஹொக்கைடோவை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் பல சேதமடைந்துள்ளன, பலர் காணாமல் போயுள்ளனர்.தீவின் பெரும்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவானது. இது பூமிக்கு அடியில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்க மையம் டொமகோமய் நகருக்கு கிழக்கே இருந்தது. ஹொக்கைடோவின் தலைநகர் சப்போரோவிலும் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. இங்கு சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
ஜப்பான் ஒலிபரப்பாளர் என்.எச்.கேயின்படி, சுமார் 125 பேர் காயமடைந்துள்ளனர், 20 பேர் காணாமல் போயுள்ளனர். ஹொக்கைடோவில் 48 பேர் காயமடைந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
அத்சுமா நகரில் பலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது, இங்குதான் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு வீட்டுகளை விழுங்கியுள்ளது.
யோஷினோ மாவட்டத்தில் 5 பேர் புதையுண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. வெளியேற முடியாமல் இருந்த 40 பேர் விமானத்தின் மூலம் பாதுகாப்பன இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வான்வழி பிம்பங்களைப் பார்க்கும் போது 10-15 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது தெரிந்தது. பசுமை வனாந்திரப் பகுதியில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பிரவுன் நிற சேறு சகதிகள் காண்ப்பட்டன.
விமானநிலையங்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டன. மீட்புப் பணிக்காக 25,000 படையினரும் பிறக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார். சப்போரோவில் நிலசரிவினால் புறப்பட்ட சேறு சகதியில் பல கார்கள் சிக்கியுள்ளன.
ஹொக்கைடோ முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் பலரைக் காணவில்லை என்றும் அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
பிரதமர் அலுவலகத்தில் நெருக்கடி மேலாண்மை பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. டொமாரி அணு உலை பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.