

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தயாராகி வருகிறது. எனினும் இந்தப் போர் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, இராக் அரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் அப்பகுதியில் கடந்த மாதம் முதல்கட்டமாக வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. இதுவரை சுமார் 145 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.
அதேநேரம் அப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினர், அமெரிக்கர்கள், உளவுப் பிரிவு, ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது கட்டமைப்பு வசிகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராக்கில் புதிய அரசு இந்த வாரத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்படி, இராக் ராணுவம், குர்திஷ் போராளிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு தேவையான பயிற்சி, ஆலோசனை வழங்கப்படுவதுடன் தேவையான ஆயுத உதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இறுதிகட்டமாக சிரியாவில் பொதுமக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிராவதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும். இந்த தாக்குதல் ஒபாமாவின் ஆட்சி முடிவதற்குள் முடிய வாய்ப்பில்லை.
அமெரிக்காவில் ஒபாமாவுக்குப் பிறகு அடுத்த ஆட்சி அமைந்த பிறகும் ஐஎஸ்எஸ் அமைப்புக்கு எதிரான போர் தொடரும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என பென்டகன் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா தலைமையில் ஒரு படையை உருவாக்க உலக நாடுகளிடம் ஆதரவு கோர ஒபாமா திட்டமிட்டுள்ளார். அதேநேரம் மீண்டும் ஒரு இராக் போராக இது அமையாது என அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா உறுதி அளித்துள்ளார்.