Last Updated : 29 Sep, 2018 09:39 PM

 

Published : 29 Sep 2018 09:39 PM
Last Updated : 29 Sep 2018 09:39 PM

‘பயங்கரவாதத்தைப் புனிதப்படுத்துபவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது?’- பாகிஸ்தானை விளாசிய சுஷ்மா சுவராஜ்

 

தீவிரவாதிகளைப் புனிதப்படுத்தி, எங்கள் நாட்டை ரத்தச்சகதியாக்கும் பாகிஸ்தானுடன் நாங்கள் எவ்வாறு பேச்சு நடத்துவது?, அமைதிப்பேச்சை நாங்கள் குலைக்கிறோம் என்பது பாகிஸ்தானின் பச்சைப் பொய் என்று ஐநாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காட்டமாகப் பேசினார்.

ஐ.நா.வின் 73-வது பொதுக்குழுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றுள்ளார். உலகத் தலைவர்கள் முன் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

நாங்கள் எங்கள் அண்டை நாடான பாகிஸ்தானுடன் தடைப்பட்ட அமைதிப்பேச்சை மீண்டும் தொடர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டோம் ஆனால், பாகிஸ்தான் நடந்து கொண்ட முறை பிடிக்காமல்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தினோம்.

ஆனால், அமைதிப்பேச்சு வார்த்தையை நாங்கள் குலைத்ததாக பாகிஸ்தான் எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடுகிறது. இது பச்சைப் பொய். மிகவும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் நியாயமான முறையில் பேசித்தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தானுடனான பேச்சு பலமுறை தொடங்கப்பட்டுவிட்டது. அவர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்கள் என்றால், அது அவர்களின் நடத்தை காரணமாகத்தானேத் தவிர இந்தியாவின் செயல்பாட்டால் அல்ல.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்றவுடன் எங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், ஐநா பொதுக்கூட்டத்தின் போது பேச்சு நடத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்திருந்தார். இந்தியாவும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால், இது நடந்த சில மணி நேரங்களில் இந்திய வீரர்கள் 3 பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக்கொலை செய்திருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன் இதுதான் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான விருப்பமா?. நாங்கள் மட்டுமல்ல இதற்கு முன் இந்த இந்திய அரசுகளும் கூட அமைதியில்தான் ஆர்வம்காட்டின. பிரதமர் மோடி பதவி ஏற்கும்போது, சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தார். முதல்நாளிலேயே பேச்சுவார்த்தையை தொடங்க ஏற்பாடு செய்தார். நானும் கடந்த 2016-ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் இஸ்லாமாபாத் சென்று பேச்சு நடத்தினேன்.

ஆனால், எங்களுக்குப் பரிசாக பாகிஸ்தான் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜனவரி 2-ம் தேதி தீவிரவாதிகளை வைத்துத் தாக்குதல் நடத்தியது. இப்போது சொல்லுங்கள் நாங்கள் எப்படி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும். எங்கள் நாட்டை ரத்தச்சகதியாக்கியவர்களுடன் எப்படிப் பேச முடியும்?

நாங்கள் மனித உரிமைகளை மீறுகிறோம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. தீவிரவாதிகளை தூண்டிவிடுபவர்களைக் காட்டிலுமா மனித உரிமைகளை மீறுபவர்கள் இருக்க முடியும். அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்களை எவ்வாறு அழைப்பது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை புனிதப்படுத்துகிறது. தாங்கள் செய்த தவறுகளை மறுக்கிறது

தீவிரவாதத்தை அதிகாரப்பூர்வ கொள்கையாக வைத்திருக்கிறது. எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் தீவிரவாதமும், காலநிலை மாற்றமும்தான்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x