

மிகவும் பணக்கார நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்க பில்லியன் டாலர்கள் கணக்கில் செலவிடுகிறது ஆனால் அவர்கள் அமெரிக்காவுக்கு ஒன்றுமே திருப்பிச் செய்யவில்லையே என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புலம்பியுள்ளார்.
இந்த விஷயங்களில் நிர்வாகத்தில் ‘தான் மிகவும் தனிமைப்பட்டுப் போயுள்ளேன்’ என்றும் அங்கலாய்த்துக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர்.
வாஷிங்டனைச் சேர்ந்த செய்திப் பத்திரிகையில் ட்ரம்ப் கூறியதாகக் காட்டப்பட்ட மேற்கோள்: “மிகப் பணக்கார நாடுகளை நாம் பாதுகாக்கிறோம், ஆனால் அதற்காக அவர்கள் நமக்கு எந்த ஒரு தொகையையும் அளிப்பதில்லை. இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் செலவு செய்கிறோம், அதனை மீண்டும் பெற எங்களுக்கு உரிமையில்லையா? முழுத்தொகையையும் திருப்பி அளிக்க வேண்டும், நாங்கள் உங்களுக்காக செலவு செய்யும் தொகை சாதாரணமல்ல, திருப்பிக் கொடுங்கள்” என்று டெய்லி காலர் செய்தி இதழுக்கு ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனது இந்தப் பார்வையில் தனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை என்றும் தனிமைப்பட்டுப் போயிருப்பதாகவும் புலம்பியுள்ளார் ட்ரம்ப். “யாரும் புரிந்து கொள்ளவில்லை. நிறைய் பேருக்குப் புரியவில்லை. ஆனால் 3 அல்லது 4 முறை திரும்பத் திரும்பக் கூறினால் புரிந்து கொள்கிறார்கள். அதாவது நாடு நாடாக நான் செல்ல வேண்டும், ஆனால் அவர்களை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த மாட்டேன்.
அதாவது எனக்கு நானே கூறுவேன், “ஓகே, உங்களுக்கு ஒருநாடு, அது மிகவும் செல்வம் கொழிப்பதாக உள்ளது, நாங்கள் அதைப் பாதுகாக்கிறோம், பெரிய தொகையை செலவிடுகிறோம், பில்லியன் டாலர்கள் செலவிடுகிறோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு பதில் மரியாதை செய்வதில்லை
ஏன்? நான் நேர்மையானவன், நான் நாடுகளிடம் கேட்டேன், எங்களுக்கு திருப்பித் தாருங்கள் என்று, முதலில் அவர்களுக்கு என் கேள்வி புரியவில்லை ஆனால் அடுத்த 5 நிமிடங்களில் ஏற்றுக் கொண்டார்கள்
நானும் விளாதிமீர் புதினும் அருமையான சந்திப்பு மேற்கொண்டோம். ஆனால் ஊடகங்கள் நானும அவரும் மேடையில் பாக்சிங் சண்டை போட வேண்டும் என்று நினைக்கிறார்கள், இது பைத்தியக்காரத் தனம்” இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.