

ஏமனில் சவுதி கூட்டுப் படைகளால் நூற்றுக்கணக்கான மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வரும் நிலையில், தங்கள் ஆதரவு தொடர்ந்து சவுதிக்கு இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது.
ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதில் சவுதி கூட்டுப் படைகளுக்கு ஆதரவாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனும், அமெரிக்காவும் ஆயுத உதவி செய்து வருகிறது.
இந்த நிலையில் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஏமனில் நடந்து வரும் போரில் சவுதி கூட்டுப் படைகளுக்கு எங்களின் ஆதரவு தொடர்ந்து அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏமனில் நடந்து வரும் போரில் இதுவரை 16,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்று கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்த நிலையில் ஏமனில் சவுதி கூட்டுப் படைகளின் தாக்குதலை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்து வருவதால், சவுதி கூட்டுப் படைகளுக்கு அமெரிக்கா அளித்துள்ள ஆதரவின் பின்னணியில் அவர்களின் ஆயுத விற்பனை உள்ளது என்று பல மனித உரிமை அமைப்புகள் பல விமர்சித்துள்ளன.