Published : 24 Sep 2014 10:49 AM
Last Updated : 24 Sep 2014 10:49 AM

உலக மசாலா: நடிகர் கட்-அவுட்டை திருமணம் செய்த பெண்

கின்னஸ் சாதனைக்காக ஒவ்வொருவரும் என்னவெல்லாமோ கஷ்டப்பட்டு செய்துகொண்டிருக்க, கனடாவைச் சேர்ந்த ஆயில் கம்பெனி எளிதான வழியைக் கையாண்டிருக்கிறது. தன்னுடைய ஊழியர்கள் 542 பேருக்கு பேட்மேன் உடையை அணிவித்து, பெரிய பேட்மேன் கூட்டத்தை உருவாக்கி கின்னஸில் இடம்பிடித்துவிட்டது. இது ஒன்றும் இவர்களுக்குப் புதிய விஷயமல்ல; ஏற்கெனவே 437 பேருக்கு சூப்பர்மேன் ஆடைகளைப் போட்டு உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசிச்சா, நாமும் கூட ஒரு சாதனையைச் செஞ்சுடலாம் போலிருக்கே!

இப்படியெல்லாம் கூட நடக்குமா? லாஸ் வேகாஸில் வசிக்கும் 25 வயது லாரன் அட்கின்ஸ், எட்வர்ட் கலெனின் தீவிர ரசிகை. ட்விலைட் திரைப்படத்தில் ரத்தக்காட்டேரியாக நடித்தவர்தான் இந்த எட்வர்ட். எத்தனையோ மாப்பிள்ளைகள் லாரனைத் திருமணம் செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் ஒருவரைக் கூட அவருக்குப் பிடிக்கவில்லை. சரி, தனக்குப் பிடித்த எட்வர்டையே திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். எட்வர்டின் நிஜ உயரத்துக்கு ஒரு கட்-அவுட் செய்து, திருமணமும் செய்துகொண்டார். சின்ன வயதில் டிஸ்னி கார்ட்டூன்கள் மேல் இருந்த அளவு கடந்த அன்பு, வயதானதும் எட்வர்ட் மேல் திரும்பிவிட்டது. “நினைத்தவரையே திருமணம் செய்துகொள்ள எத்தனைப் பேரால் முடிகிறது? நான் நினைத்ததைச் சாதித்துவிட்டேன். எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார் லாரன்!.

ஐயோ… இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்றது?

பத்து வயதான தேஜன்னா ப்ரைஸ் படு சுட்டி. வாஷிங் மெஷினில் ஏறி உட்கார்ந்தபோது, தவறி மெஷினுக்குள் விழுந்துவிட்டாள். எழுந்து வர முயற்சி செய்தபோதுதான் தெரிந்தது, நன்றாக மாட்டிக்கொண்டிருப்பது. அம்மாவை உதவிக்கு அழைத்தாள். வழக்கமான குறும்புதான் என்று நினைத்த அம்மா, அவளாக வெளியே வரட்டும் என்று காத்திருந்தார். வரவில்லை. பிறகு அவரே குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ம்ஹூம்… தூக்க முடியவில்லை. நியூயார்க் போலீஸை அழைத்தார். ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, தேஜன்னா வெளியே வந்தார்.

விளையாட்டு வினையாகும்னு சும்மாவா சொல்லிருக்காங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x