Last Updated : 18 Sep, 2018 05:01 PM

 

Published : 18 Sep 2018 05:01 PM
Last Updated : 18 Sep 2018 05:01 PM

ஆடம்பர கார்களை ஏலம் விட்ட பாக். பிரதமர் இம்ரான்; ஷெரீப் பயன்படுத்திய எருமைகளையும் விற்கத் திட்டம்

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இம்ரான் கான், பிரதமர் அலுவலகத்தில் இருந்த 70 ஆடம்பர கார்களை ஏலத்தில் விட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, ''பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்'' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, பிரதமர் இல்லத்தில் உள்ள 120 ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விட முடிவெடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 70 ஆடம்பர கார்கள் ஏலத்தில் விடப்பட்டன. வழக்கமான விலையைக் காட்டிலும் அவை அதிகமான விலைக்கு விற்றுத் தீர்ந்தன.

இதுகுறித்துப் பேசிய தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ''முதல் முறையில் 70 கார்களை நல்ல விலைக்கு வெற்றிகரமாக விற்றுவிட்டோம். இந்த ஏலம் மூலம் அரசுக்கு சுமார் ரூ.116 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அடுத்தபடியாக புல்லட் ப்ரூஃப் வாகனங்கள் ஏலத்துக்கு விடப்படும்'' என்றார்.

ஆடம்பரக் கார்களை தவிர்த்து பிரதமர் இல்லத்தில் இருக்கும் 8 எருமைகளை ஏலத்தில் விட இம்ரான் திட்டமிட்டுள்ளார். இந்த எருமைகளை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், உணவுத் தேவைகளுக்காக வைத்திருந்தார்.

ஏலத்துக்கு விடப்பட்ட கார்களில் 26 மெர்சிடிஸ் பென்ஸ், 8 புல்லட் ப்ரூஃப் பிஎம்டபிள்யூ, எஸ்யூவிக்கள் அடங்கும். அத்துடன் 40 டொயோட்டா கார்கள், எஸ்யூவி, லேண்ட் க்ரூசர் மற்றும் பல கார்கள் ஏலத்துக்கு விடப்பட உள்ளன.

தற்போது பாகிஸ்தானின் கடன் தொகை ரூ.30 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 87 சதவீதம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x