

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை ராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான ராணுவப் பயிற்சியில் சீனா முதல் முறையாகப் பங்கேற்றுள்ளது. இதில் வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், ஒற்றுமைகள் பரஸ்பரமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் இந்தக் கூட்டுப் பயிற்சி நம்பகத்தன்மையை இதில் பங்கேற்ற நாடுகளிடையே அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய ராணுவப் படை தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனா - அமெரிக்கா இடையே வணிகப் போர் வலுத்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் சீனா கலந்து கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.