

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து நைஜீரிய ஊடகங்கள், ''நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள கொண்டுகா பகுதியில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவின் போகோ ஹராம் ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
நைஜீரியாவில் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போகோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டில் தங்கள் தாக்குதலை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளனர்.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சுமார் 20,000 பேர் பலியாகி, சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டுள்ளது.