

சிரியாவில் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரசுப் படை மற்றும் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர். இதில் 7 பேர் பொதுமக்கள்.
சிரியாவில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்த நிலையில் சிரியாவில் வடகிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, “சிரியாவில் வியாழக்கிழமை வடகிழக்குப் பகுதியிலும், இட்லிப் மாகாணம், ஹமா மாகாணம் என பல இடங்களில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதில் 21 தீவிரவாதிகள் மற்றும் பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.