Published : 11 Jun 2019 11:23 AM
Last Updated : 11 Jun 2019 11:23 AM

பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து செல்ல அனுமதி

கிரிகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடி, விமானத்தில் செல்லும்போது  பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தடை விதித்தது.

இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கிவரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தை மட்டுமே பாகிஸ்தான் தற்போது அனுமதித்துள்ளது. மற்ற வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

கடந்த மாதம் 22, 23-ம் தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  பிஷ்செக் நகருக்கு செல்லும்போது, பாகிஸ்தான் வான்வெளியியில் பறக்க இந்திய அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது அதற்கு பாக் அரசு அனுமதி அளித்தது.

அதேபோல, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் இலங்கை, மாலத்தீவு செல்ல இந்திய வான்வழியாகச் செல்ல அனுமதி கோரினார். அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்தது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் சென்றால் கிரிகிஸ்தான் செல்ல நீண்ட தொலைவும், நேரமும் ஆகும்.

பாகிஸ்தான் வழியாகச் சென்றால், 4 மணிநேரமும், மாற்றுப்பாதையில் சென்றால் 8 மணிநேரமும் ஆகும். எனினும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வரும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தை பயன்படுத்தி சில நிபந்தனைகளை விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எந்த நிபந்தனைகளும் இன்றி இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியாக செல்ல அனுமதி வழங்குவது என கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளோம்.

இதனை இந்திய அரசுக்கு தெரிவிப்போம். இந்தியாவுடன் நல்லுறைவை பேணவே நாங்கள் விரும்புகிறோம். பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளார்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x