இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு: அதிபர் உத்தரவு

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு: அதிபர் உத்தரவு
Updated on
1 min read

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்.21 அன்று ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த பயங்கரத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிர வாதிகளுக்குத் தலைவராக ஜஹ்ரான் ஹாசிமின் செயல்பட்ட தாகவும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்றும் இலங்கை அரசு குற்றம்சாட்டி அந்த அமைப்புக்கு தடையும் விதித்தது. குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்.24 முதல் அவசர காலச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.

இந்த அவசர காலச் சட்டத்தின் மூலம் இலங்கை காவல்துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள் முப்படையினர் வசமாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முப்படைகளின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு விசாரணை நிறைவு பெறும் வரை நீதிமன்றத்தால்கூட பிணை வழங்க முடியாத நிலையும் உள்ளது.

இந்தநிலையில் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘இலங்கையில் தற்போது நிலவும் சூழலில் மேலும் சில காலத்துக்கு அவசர நிலையை அமல்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கருதியும், சமூகங்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை கருதில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு படையினருடன், இணைந்து போலீஸார் செயல்படுவர். கடுமையான சில சட்டங்கள் கைவிடப்படும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in