

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு கிராமங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 38 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மாலி அரசுத் தரப்பில், ''மாலியில் மாப்டி மாகாணத்தில் உள்ள கங்காஃபானி மற்றும் யோரா கிராமங்களில் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் கிராம மக்கள் 38 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த இடத்துக்கு விசாரணைக்காக ராணுவப் படையை மாலி அரசு அனுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. மாலியில் மாப்டி மாகாணம்தான் சமீப காலங்களில் அதிகம் வன்முறை நடக்கும் பகுதியாக மாறியுள்ளது.
அங்கு கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறையில் 135 பேரும், ஜூன் மாதத்தில் நடந்த வன்முறையில் 94 பேரும் பலியாகியுள்ளனர்.
அங்குள்ள டோகான் ஃபுலானி சமூக அமைப்புகளுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.