Last Updated : 01 Jun, 2019 09:49 AM

 

Published : 01 Jun 2019 09:49 AM
Last Updated : 01 Jun 2019 09:49 AM

இந்தியாவுக்கான வர்த்தக சிறப்புரிமை ரத்து: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு : 2 ஆயிரம் பொருட்களுக்கு வரிவிதிப்பா?

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சிறப்பு உரிமை அந்தஸ்தை வரும் ஜுன் 5-ம் தேதியோடு ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி 2-வது முறையாக நேற்றுத்தான் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளரும் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பொதுமைப்படுத்தப்பட்ட வர்த்தக சிறப்புரிமை(ஜஎஸ்பி) திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்தது. இதன்படி, வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டில் இருந்து வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த சலுகை வளரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

தெற்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இந்த ஜிஎஸ்பி வர்த்தகத் திட்டம் இந்தியா பயன் அடைந்து வந்தது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஆடைகள், ஜவுளிப்பொருட்கள் என 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்துவந்தது. கடந்த 2017-ம் ஆண்டின் கணக்கின்படி,அதிகபட்சமாக இந்தியா 570 கோடி டாலர்(ரூ.40 ஆயிரம் கோடி) அளவுக்கு சலுகைகளை அனுபவித்துள்ளது. துருக்கி 170 கோடி டாலர்கள் அளவுக்கு சலுகைகளை அனுபவித்தது.

இந்நிலையில், நீண்டகாலமாக இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் இந்த சலுகையை ஏன் ரத்து செய்யக்கூடாது. எங்கள் நாட்டுக்கு இந்தியாவின் பொருட்கள் வரியின்றி விற்பனைக்கு வரும் போது, எங்கள் நாட்டுப் பொருட்களை எளிதாக விற்பனைக்கு இந்தியா அனுமதிக்க மறுப்பது ஏன். இதனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டும் வரும் சிறப்புரிமை வர்த்தக அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி  நோட்டீஸ் அனுப்பி இருந்தது அதிபர் ட்ரம்ப் அரசு.

அந்த நோட்டீஸ் காலம் முடிந்ததையடுத்து, வரும் ஜூன் 5-ம் தேதியில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தக சிறப்புரிமையை ரத்து செய்வதாக அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், " இந்தியாவுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டுவந்த வளரும் நாடுகளுக்கான  வர்த்தக சிறப்புரிமை(ஜிஎஸ்பி) அந்தஸ்தை ரத்து செய்கிறோம். இது வரும் ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அமெரிக்காவின் பொருட்களை எளிதாக, நியாயமாக இந்திய சந்தைக்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து எங்களுக்கு உறுதிஏதும் அளிக்கவில்லை. இதனால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த ஜிஎஸ்பி அந்தஸ்தை ரத்து செய்கிறேன் " எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்காவுக்கு கூடுதலாக 30கோடி டாலர் வரி செலவு ஏற்படும். இந்தியாவுக்கு ஜிஎஸ்பி அந்தஸ்தை ரத்து செய்யாதீர்கள்  என்று அமெரிக்க எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தும் அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்கு மேல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எந்த அளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x