

பிரதமராக மோடி 2-வது முறையாகை பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின் முதல்முறையாக இன்று இலங்கை சென்றடைந்தார்.
கொழும்பு பண்டாரநாயகே விமானநிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, பிரதமர் விக்ரம சிங்கே பூங்கொத்து வரவேற்றார்.
மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மாலத்தீவு அதிபர் முகமது இப்ராஹிம் சோலிஹ்குடன் பேச்சு நடத்தினார். இரு தரப்பு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
மேலும், மாலத்தீவு பாதுகாப்பு படைக்காக அமைக்கப்பட்ட கடற்சார் கண்காணிப்பு ரேடார் முறை மற்றும் பயிற்சி மையத்தை பிரதமர் மோடியும், அந்நாட்டு அதிபர் சோலிஹ் சேர்ந்து இன்று தொடங்கி வைத்தனர். பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசின்ச சார்பில் உயரிய நிஷான் இசுதீன் விருது வழங்கப்பட்டது.
தனது மாலத்தீவு பயணத்தை முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி இலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு இன்று நண்பகலில் வந்து சேர்ந்தார். விமானநிலையத்தில் அந்த நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே பூங்கொத்து கொடு்த்து வரவேற்றார்.
இலங்கை அதிபர் சிறிசேனா இன்று அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிரதமர் விக்ரமசிங்கே, அதிபர் சிறிசேனா, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சே ஆகியோருடன் பேச்சு நடத்துகிறார்.
மேலும், இலங்கையில் உள்ள முக்கிய கட்சியான தமிழ்தேசியக் கட்சியின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டியை அன்று நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்தபின் இலங்கை செல்லும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.