சர்வதேச போட்டி திறன் நாடுகளில் இந்தியா பின்தங்கியது: சுவிட்சர்லாந்து முதலிடம்
சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 71-வது இடத்துக்கு பின்தங்கி உள்ளது. இதில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்ட உலக பொருளாதார அமைப்பு, சர்வதே போட்டி திறன் அறிக்கை 2014-15-ஐ புதன்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
சர்வதேச அளவில் போட்டி திறன் மிக்க நாடுகள் அடங்கிய பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகியவை முறையே 2, 3-ம் இடங்களையும் பிடித்துள்ளன.
பின்லாந்து (4), ஜெர்மனி (5), ஜப்பான் (6), ஹாங்காங் எஸ்ஏஆர் (7), நெதர்லாந்து (8) பிரிட்டன் (9) ஸ்வீடன் (10) ஆகியவை முதல் பத்து இடங்களைப் பிடித்த மற்ற நாடுகள் ஆகும்.
இந்தப் பட்டியலில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் இந்தியா, இந்த முறை 11 இடங்கள் பின்தங்கி 71-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அந்நாட்டு பொருளாதாரம், சர்வதேச போட்டித் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே இந்தியாவின் போட்டித் திறன் சரிந்து வருகிறது. 2009-ல் 8.5 சதவீதமாக இருந்த அதன் பொருளாதார வளர்ச்சி, படிப்படியாக சரிந்து 5 சதவீதத்துக்கும் கீழே சரிந்துள்ளது. இதுதவிர வர்த்தக வாய்ப்புகள், நிதி சந்தை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிலையிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டில் 27-வது இடத்தில் இருந்த சீனா, ஒரு இடம் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் ‘பிரிக்ஸ்’ நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. பிரிக்ஸ் குழுவில் இடம்பிடித்துள்ள மற்ற நாடுகளான ரஷ்யா (53), தென்னாப்ரிக்கா (56), பிரேசில் (57) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியா மட்டுமல்லாது, சவூதி அரேபியா (24), துருக்கி (45), மெக்சிகோ (61), நைஜீரியா (127), தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய வளரும் நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன.
