கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி: தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அஞ்சலி: தீவிரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
Updated on
1 min read

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போரிட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடானுக்குச் சென்றார். இரண்டாவது முறையாக கடந்த 30-ம் தேதி பிரதமராக பதவியேற்ற அவர் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவுக்குச் சென்றார்.

அங்கிருந்து நேற்று அவர் இலங்கை சென்றார். தலைநகர் கொழும்பில் உள்ள பண்டாரநாயக விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

தேவாலயத்தில் அஞ்சலி

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவா லயத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடியும் ரணிலும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். தீவிரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். கொழும்பில் நேற்று கனமழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் அதிபர் சிறிசேனா குடையுடன் வந்து மோடியை வரவேற்று அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், மோடியை சந்தித்து இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

கொழும்பில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியபோது, ‘‘இந்தியாவில் கடந்த 5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்த சாதனைகள் தொடரும். இந்திய மக்களின் கனவுகள், நனவாக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

தனது இலங்கை பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தீவிரவாதம் அனைவருக்கும் பொதுவான எதிரி. தீவிரவாதிகளால் இலங்கையின் ஆன்மாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. உலகை அச்சுறுத்தும் தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போரிட வேண்டும். இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in