ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்து

ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்து
Updated on
1 min read

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறைச் ச்செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

அங்கு அவர் கணினி ஹேக்கிங் வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும், அமெரிக்க அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பிரிட்டன் அசாஞ்சேயை அமெரிக்காவுக்கு நாடுகடத்த கையெழுத்திட்டுள்ளது.

ஆனால் இறுதி முடிவு பிரிட்டன் நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்கிறாஅர் சாஜித் ஜாவித்.

பிபிசிக்கு ஜாவித் கூறும்போது, “அவர் மிகச்சரியாகவே கம்பிகளுக்குப் பின்னால் உள்ளார்.  அவரை நாடுகடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இது வெள்ளியன்று கோர்ட் விசாரணைக்கு வருகிறது.  ஆனால் நான் புதனன்று நாடுகடத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டேன், சான்றிதழும் அளித்து விட்டேன், நாளை இது கோர்ட்டுக்குச் செல்கிறது” என்றார்.

மேலும், “இது நீதிமன்றங்களினால் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு இந்த விஷயத்தில் நியாயமான நாடுகடத்தல் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆகவே நான் அதில் கையெழுத்திட்டேன். ஆனால் இறுதி முடிவு கோர்ட்டில் உள்ளது.

அமெரிக்க நீதித்துறையினால் ஜூலியன் அசாஞ்சே மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  இப்போது அசாஞ்சே உயர் பாதுகாப்பு லண்டன் பெல்மார்ஷ் சிறையில் இருக்கிறார்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி நாடுகடத்தல் வழக்கை விசாரிக்கும் அதே வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் தலைமை மேஜிஸ்ட்ரேட் எம்மா அர்புத்நாட் இந்த விசாரணையையும் மேற்கொள்கிறார்.

இந்திய-பிரிட்டன் நாடுகடத்தல் ஒப்பந்தம் போல் இல்லாமல் அமெரிக்க-பிரிட்டன் நாடுகடத்தல் ஒப்பந்தம் சிக்கலானது அல்ல, இந்த ஒப்பந்தத்தில் முதற்கட்ட ஆதாரங்களை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை.

அமெரிக்க உளவுச் சட்டம் இவர் மீது பாய்ந்துள்ளது. இதன் படி வெளியிட அனுமதி இல்லாத ஆவணங்களையும் அரசு தகவல்களையும் ரகசியங்களையும் இவர் விக்கிலீக்ஸ் மூலம் வெளி உலகுக்கு தெரிவித்தார் என்பதும் அரசுத்துறை கணினியை ஹேக் செய்தார் என்பது உள்ளிட்ட பல சதிவழக்குகள் இவர் மீது உள்ளன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்சே இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, கருத்துரிமை மீதான தாக்குதல் என்று அமெரிக்காவையும் பிரிட்டனையும் விமர்சித்தார்.

முன்னதாக ஸ்வீடனில் அசாஞ்சே மீது பாலியல் வழக்கு இருந்ததால் அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற ஸ்வீடன் கோரிக்கையை ஸ்வீடன் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in