

புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பான் போன்ற நாடுகளின் பங்கு மிக முக்கியமானது என பிரதமர் மோடி கூறினார்.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதில் ஜி-20 அமைப்பில் இடம்பெற்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று காலை ஒசாகா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் ஜப்பானில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கற்ற அவர் அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா - ஜப்பான் இடையே நீண்டநாள் உறவு உள்ளது. பழங்காலம் முதலே ஜப்பானுடன் இந்தியா தொடர்பில் இருந்துள்ளது. 2-ம் உலக போரின்போது இருநாடுகள் இடையே மிக நெருங்கிய உறவு ஏற்பட்டது.
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 4 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இந்திய விரைவில் உயரும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. புதிய இந்தியாவை உருவாக்க ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.