

ஜமால் கஷோகி மரணத்துக்குக் காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மால் கஷோகியின் மரணம் குறித்த முக்கியமான ஆதாரம் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு வெளியிட்டது. அதில், இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்துக்குள் கொல்லப்பட்ட கஷோகி உடலை மறைப்பதற்காக சவுதி அதிகாரிகள் பேசிக்கொண்ட ஆடியோ வெளியிடப்பட்டது.
அந்த உரையாடலில் பதிவானவர்களில் சவுதி இளவரசரின் மூத்த ஆலோசகராக உள்ள மஹிரின் குரலும் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, ''சவுதி அரேபிய பத்திரிகையாளர் மரணத்துக்குக் காரணமானவர்கள் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். அவரது மரணத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.
ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.
இந்நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகம்து பில் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.
முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறிய சவுதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்த நிலையில் சவுதிக்கு எதிரான வலுவான ஆதாரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது.