

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் மீதான பிடி இறுகி வரும் நிலையில் மேற்கு கோர் மாகாணத்தில் அரசு ஆதரவுப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹாய் காடேபி தெரிவிக்கையில், ''சோதனைச் சாவடி பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் தலிபான் தீவிரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் உயிருக்குக் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து துல்லியமான புள்ளிவிவரங்களை வழங்காமல் தலிபான்கள் ஏமாற்றி வருகின்றனர்'' என்றார்.
தலிபான்கள் நாட்டின் பாதிப் பகுதியைத் திறம்பட கட்டுப்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஆப்கன் பாதுகாப்புப் படையினரையும் அரசாங்கத்தையும் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள்.
18 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சமீபத்திய மாதங்களில் கிளர்ச்சியாளர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.