Published : 13 Sep 2014 10:10 AM
Last Updated : 13 Sep 2014 10:10 AM

சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் பேட்டி

சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ச ‘தி இந்து’வுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தம் குறித்தும் அதை அமல் படுத்தும் விதம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் (டி.என்.ஏ.) பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என்று கூறினார்.

ராஜபக்சவின் அழைப்பு குறித்து டி.என்.ஏ. தலைவர் இரா. சம்பந்தன் தி இந்துவிடம் கூறியதாவது: 13-வது சட்டத் திருத்தம் தொடர்பான அதிபர் ராஜபட்சவின் கருத்தை, பேச்சு வார்த்தைக்கான அழைப்பை வரவேற்கிறோம். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராகவே உள்ளோம். ஆனால் கடந்தகால அனுபவங்களில் கற்ற பாடத்தினால் தற்போது சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அப்போதுதான் அதிபர் ராஜபக்ச அளிக்கும் உறுதிமொழிகள் எல்லோருக்கும் தெரியவரும்.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறை சம்பவங்கள் நேரிட் டுள்ளன.

எனவே 13-வது சட்டத் திருத்தத்தில் போலீஸ் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

ராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க போலீஸ் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகார பகிர்வின் முக்கிய அங்க மாகும்.

இதுதொடர்பாக இந்தியா விடமும் ஐ.நா. சபையிடமும் இலங்கை அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இரா. சம்பந்தனின் கருத்தை இதர அரசியல் கட்சிகளும் ஆமோதித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியபோது, ராஜபக்சவின் அழைப்பை வரவேற்கிறோம், அதேநேரம் சர்வதேச கண்காணிப்பில் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இரா. சம்பந்தன் கூறியது நூற்றுக்கு நூறு சரி என்று தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மூத்த தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியபோது, இரா. சம்பந்தனின் யோசனையை ஆமோதிக்கிறோம், சுயாட்சி நிர்வாகம் என்பது தமிழர்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம். ஆனால் கடந்தகால அனுபவங்களில் கற்ற பாடத்தினால் தற்போது சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x