Last Updated : 18 Jun, 2019 09:48 AM

 

Published : 18 Jun 2019 09:48 AM
Last Updated : 18 Jun 2019 09:48 AM

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரும், முன்னாள் அதிபருமான முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து நேற்று மரணமடைந்தார்.

எகிப்தில் நீண்டகாலம் அதிபராக இருந்து சர்வாதிகாரியாக இருந்த  ஹோஸ்னி முபாரக், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த  முகம்மது மோர்சி அதிபரானார்.  அதிபர் பதவியில் ஒரு ஆண்டு மட்டுமே இருந்த முகமது மோர்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. சாலையில் இறங்கி சகோதரத்துவ அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும், மக்களும் போராட்டம் நடத்தினார்கள். இதை அடக்க உத்தரவிட்ட அதிபர் மோர்ஸி, போராட்டம் நடத்துபவர்கள் கொல்லவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம அடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்தல் பதா அல் சிசி தலைமையிலான ராணுவம், மோர்சியை பதவியை விட்டு நீக்கியதுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அந்த அமைப்பச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக  முகமது மோர்சி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலில் மோர்சிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.

மேலும், மோர்சி மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கு நேற்று விசாரணைக்க வந்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் கண்ணாடிக் கூண்டில் ஆஜராகி மோர்சி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் உயிரிழந்தார்.

முகம்மது மோர்ஸியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல, முழுமையான திட்டமிட்ட கொலை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டாக முகமது மோர்சிக்கு உரிய மருத்துவ சிகிச்சை சிறையில் அளிக்கவில்லை. உயர்ரத்த அழுத்தம், நீரழிவு நோய் போன்றவை இருந்தும் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திட்டம்போட்டு சிறிது சிறிதாக கொலை செய்துள்ளார்கள்.

 கடந்தமாதம் கூட அவரின் குடும்பத்தினர் சென்று சந்திக்க முயன்றபோது அவர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை, அவரின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முயன்றபோதும தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

அதேசமயம், மோர்சியின் உடலில் எந்தவிதமான காயங்களும், அடிபட்டதற்கான காயங்களும் இல்லை என மருத்துவர்கள், போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x