‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ - இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை

‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ - இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை
Updated on
1 min read

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள், ஹோட்டல்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 250 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கை அரசு ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது.

இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in