

லண்டனில் பெண் விரோதச் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. ரியானைர் ஏர்லைன் பெண் ஊழியர் மற்றும் அவரது தோழி ஆகியோர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அராஜக இளைஞர் கும்பல் ஒன்று இவர்களைத் தாக்கியது.
இதனால் இரு தோழிகளும் ரத்தம் வழியும் முகத்துடன் காட்சியளித்தது சமூகவலைத்தளங்களில் அங்கு வைரலானது. 28 வயதான மெலானியா கெய்மொனாட் மற்றும் இவரது அமெரிக்க தோழி கிறிஸ் இருவரும் வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
தன் முகநூல் பக்கத்தில் கெய்மொனாட் இது பற்றி குறிப்பிடும்போது, டபுள் டெக்கர் பஸ்ஸில் நானும் என் தோழியும் மட்டும்தான் இருந்தோம், அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் நாங்கள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டு அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதோடு, எங்களை லெஸ்பியன்கள் என்று கடுமையாகக் கேலியும் கிண்டலும் செய்தனர்.
மேலும் ஆபாசமான சில அசைவுகளையும் அவர்கள் எங்களை நோக்கி பிரயோகித்தனர், மேலும் ஆபாசமான சில நகைச்சுவைகளையும் அவர்கள் பேச ஆரம்பிக்க நாங்கள் அவர்களை எச்சரித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கினர், இருவரது முகத்திலும் ரத்தம் வழிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக லண்டன் போலீஸ் தி சன் பத்திரிகையில் கூறும்போது, அந்த இளைஞர்கள் இவர்களிடமிருந்து பணம் முதலியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர் என்றார்.
இந்தச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்களுக்குரியதானது லண்டன் மேயர் சாதிக் கான் “இது வெறுக்கத்தக்க பெண் விரோத தாக்குதலாகும்” என்று சாடியுள்ளார்.
லண்டனில் தன்பாலின உறவாளர்களுக்கு எதிரான இத்தகைய வெறுப்புப் போக்கு கண்டிக்கத்தக்கது என்று பலரும் இதைக் கண்டித்து வருகின்றனர். போலீஸார் அந்தக் கும்பலைத் தேடி வருகின்றனர்.