

தீவிரவாதத்துக்கும் முஸ்லிம் மதத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாதபோது, அதை தொடர்புபடுத்திப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இஸ்லாமிய கூட்டுறவு மாநாடு(ஓஐசி) நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:
இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியபோது, யாரும் இந்து மதத்தை குறைகூறவில்லை, அமெரிக்க கப்பல்களை தகர்த்தபோது, ஜப்பானிய மக்களின் மதத்தை யாரும் குறைகூறவில்லை.
ஆனால், உலகம்முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தால் அதை இஸ்லாமிய மதத்தோடு தொடர்பு படுத்துவது ஏன்?
இவ்வாறு பேசினால் இந்த உலகை முஸ்லிம்களால் சமாதானப்படுத்தவோ, சமரசம் செய்யவோ முடியாது. ஆனால், தீவிரவாதத்துக்கும், முஸ்லிம் மதத்துக்கும எந்தவிதமான தொடர்பும் இல்லை. முஸ்லிம்கள் குறித்து அனைவரும் இதை தெளிவாக புரிந்துகொண்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.
மேற்கத்திய உலகில் வாழ்வோர் இறைதத்தூதர் முகமது நபியை இழிவுபடுத்தும்வகையில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அதைத் தடுக்க இந்த அமைப்புதவறிவிட்டது. அவர்களிடம் இறைத்தூதர் குறித்தும், முஸ்லிம்களின் அன்பு குறித்தும் தெரிவிக்க இந்த அமைப்பு தவறிவிட்டது.
நம்முடைய மனதில் இறைத்தூதர் எந்த உயரத்தில் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் மேற்கத்திய உலகத்துக்கு இறைத்தூதர் குறித்து விளக்கம் அளிக்காதவரை அவர்கள் நம்மை காயப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எந்த மதமும் அப்பாவி மக்களை கொல்ல அனுமதிப்பதில்லை. இது இஸ்லாம் மதத்தின் மீதான பயத்தைத்தான் காட்டுகிறது.
இவ்வாறு இமரான்கான் தெரிவித்தார்.