

சிரியாவில் அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும் தாக்குவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே குறிவைத்து பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகளைத் தாக்குகின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சுமார் 26 மருத்துவ சுகாதார நிலையங்கள் இட்லிப் மாகாணத்தில் தாக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வைத்துள்ளது. ஆனால், வழக்கம்போல் ஐக்கிய நாடுகளின் இந்தக் குற்றச்சாட்டை சிரியாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.
போர் பின்னணி
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது.
சிரியப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் துருக்கு போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.