Published : 27 Jun 2019 12:05 PM
Last Updated : 27 Jun 2019 12:05 PM

மகளைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரையும் இழந்த தந்தை: ஒரே ஆடைக்குள் அணைத்தபடி கரை ஒதுங்கிய பரிதாபம்

தனது கருப்பு பனியனுக்குள் தன் மகளைக் கைகளால் அணைத்தபடி ரியோ கிராண்டே நதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார் ஆஸ்கார் அல்பெர்டோ.

தனது மகளின் உயிரைக் காப்பற்றுவதற்கான முயற்சியில் தனது உயிரையும் இழந்த அந்தத் தந்தையின் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைக்கத் தவறவில்லை.

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கார் அல்பெர்டோ அமெரிக்காவுக்கு குடியேறுவதற்கான வேண்டுகோளை முன்வைத்தார். ஆனால், அவர் வேண்டுகோளை அந்நாட்டு அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்கார் தனது 2 வயது மகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டார். இதில் ஆற்றில் மூழ்கிய ஆஸ்கார் மெக்ஸிகோவின் ரியோ கிராண்டே நதியில் தனது மகளுடன் கரை ஒதுங்கினார்.

ரியோ கிராண்டே நதியில் தனது மகளுடன் ஒதுங்கிய ஆஸ்காரின் புகைப்படத்தை ஜூலியா லி டக் என்ற பத்திரிகையாளர் திங்கட்கிழமை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான செய்திகள் மெக்ஸிகோ செய்தித்தாள்களில் வெளியாகின.

''நான் ஆஸ்காரிடம் வேண்டாம் என்று எவ்வளவோ கூறினேன். ஆனால், அவர் வீடு கட்டுவதற்குப் பணம் வேண்டும் என்று கிளம்பினார். அவரது மகள் தடுமாறியதும் அவரைக் காப்பாற்ற ஆஸ்காரும் விழுந்தார். அவரது மகளைக் காப்பாற்ற நினைத்தார்.இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆஸ்கார் அவரது ஆடையை தனது மகளுக்கு அணிந்து நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். எனது மகளுடனே சென்றுவிடுகிறேன் என்று அவரும் சென்றுவிட்டார் என்று நினைக்கிறேன்'' என்றார் ஆஸ்காரின் தாய் ரோசா.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் அமைந்துள்ள ரியோ கிராண்டே நதியில் கடந்த ஆண்டு மட்டும் 283 பேர் இடம்பெயரும்போது இறந்ததாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அமெரிக்க எல்லைச் சுவர்

முன்னதாக, மெக்ஸிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர்.

இதைத் தடுக்க சுமார் 670 மைல் தொலைவுக்கு எல்லையில் ஏறிக் கடக்க முடியாத, நுழைய முடியாத, உயரமான பெரிய , நீளமான சுவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x