Last Updated : 20 Jun, 2019 12:44 PM

 

Published : 20 Jun 2019 12:44 PM
Last Updated : 20 Jun 2019 12:44 PM

பெற்ற தாயை பட்டினி போட்டு, சூடுவைத்து, கொடுமைப்படுத்திய இந்தியர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு

பெற்ற தாயை பட்டினி போட்டு, உடலில் சூடுவைத்து, கொடுமைப்படுத்தி அவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக 29 வயது இந்தியர், அவரின் மனைவி மீது துபாய் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெற்ற தாயை பட்டினி போட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் கை, கால் எலும்புகளை உடைத்தும், அவரின் கண் கருவிழிகளை சேதப்படுத்தியும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இந்தியர் மற்றும் அவரின் 28 வயது மனைவி ஆகியோரின் பெயர் அடையாளத்தை வெளியிடவில்லை. இந்த வயதான தாயை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை கொடுமைப்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் இறக்கும் போது வெறும் 29 கிலோ எடை மட்டுமே இருந்தார் என்றும் தடயவியல் மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்த வயதான தாய் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இறந்துள்ளார் என்று மருத்துவமனை அளித்த சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயைக் கொடுமைப்படுத்திய இந்தியர் மீதும், அவரின் மனைவி மீதும் துபாயில் உள்ள அல் குவாசிஸ் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியரின் வீட்டுக்கு அருகே குடியிருந்த 54 வயதுள்ள பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அந்த 54 வயதுள்ள பெண் பெயர் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் மருத்துவனையில் பணியாற்றுகிறார் என்பது தெரியவந்தது.

அந்த வயதான தாயை இந்தியரும், அவரின் மனைவியும் செய்த கொடுமையை அவர்களின் வீட்டுக்கு அருகே குடியிருந்தவர் நேரடியாகப் பார்த்து இந்தப் புகாரை செய்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியரும், அவரின் மனைவியும் மறுக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த 54 வயதுப் பெண் கூறியுள்ளதாவது:

29 வயது இந்தியரும், அவரின் மனைவியும் வசித்த அதே குடியிருப்பில், அவர்களின் வீட்டுக்கு எதிரேதான் குடியிருக்கிறேன். ஒருநாள் என்னிடம் இந்தியரின் மனைவி வந்து என் அத்தை இந்தியாவில் இருந்து வந்துள்ளார், அங்கு அவரின் மகள்  சரியாகப் பராமரிக்கவில்லை.

ஆதலால், இங்கு அழைத்து வந்துள்ளோம். நாங்கள் அலுவலகத்துக்குச் சென்ற நேரத்தில் அவரை பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். ஆனால், 3 நாட்களுக்குப் பின் அந்த இந்தியர் வீட்டு மாடி முற்றத்தில் அந்த வயதான பெண் நிர்வாணமாகக் கிடந்தார். உடலில் பல்வேறு சூடுவைக்கப்பட்ட காயங்களுடன், அழுதுகொண்டே, வலியால் துடித்தார். நான் உடனடியாகப் பாதுகாவலருக்கு தெரிவித்தேன்.

நானும் அந்த இந்தியரின் வீட்டின் கதவைத் தட்டி, உங்கள் அத்தை மாடியின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறார். காப்பாற்றுங்கள், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. நான் ஆம்புலன்ஸை அழைக்கிறேன் என்றேன். அப்போது அந்த தாயின் அழுகுரல், வலியால் துடித்த குரல் என் காதில் ஒலித்தது வேதனையாக இருந்தது.

சிறிதுநேரத்தில் ஆம்புலன்ஸ் அங்கு வந்துவிட்டது. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன் அந்த வயதான தாயை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தேன். தன்னுடைய தாயை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்குக்கூட அவரின் மகன் உதவி செய்யவில்லை என புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த வயதான பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பிலிப்பினோ மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், " நான் அந்த வயதான பெண்ணைப் பார்த்தபோது மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தார். வலியால் துடித்தார், அவரின் கை, கால்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டன. அப்போது உடலில் இருந்த காயங்கள் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, தன்னுடைய மகன் கொதிநீரை உடலில் ஊற்றிவிட்டதாகத் தெரிவித்து அழுதார்.

ஏறக்குறைய  3 மாதங்களாக அந்தத் தாயை அவரின் மகனும், மருமகளும் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். அவரின் உடலில் 10 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடலின் எலும்புப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, எலும்பு மஜ்ஜையில் ரத்தம் கசிந்துள்ளது. மேலும், பல்வேறு பொருட்களால் பயன்படுத்தி அந்த முதியவரை தீக்காயம் ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அந்த வயதான பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்" எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம், ஜூலை 3-ம் தேதி வரை இந்தியரையும், அவரின் மனைவியையும் காவலில் வைக்க உத்தரவிட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x