

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 43 வருடங்கள் கழித்து மரண தண்டனையை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் மரண தண்டனை முறைகள் காணப்பட்டாலும், முதல் முறையாக 1681 ஆம் ஆண்டு ஒரு குற்றவாளி யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சியை இலங்கைக்குப் பயணம் சென்ற வரலாற்றுப் பயணி ராபர்ட் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
பிரிட்டனின் காலனி நாடாக இலங்கை இருந்த காலத்தில் இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 285-வது பிரிவின்படி, மரண தண்டனையும் தண்டனைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகும் தொடர்ந்து மரண தண்டனை இலங்கை சட்டப் புத்தகத்தில் அப்படியே இடம்பெற்றது.
இலங்கையில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களிலும், கோட்டைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. பின்னர் 1871 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையிலும் அதனைத் தொடர்ந்து கண்டி போகம்பறை சிறைச்சாலையிலும் தூக்குமேடைகள் அமைக்கப்பட்டன. 43 ஆண்டுகளுக்கு முன்னர் 23.06.1976 அன்று கொந்த பப்புவா என்பவருக்கே இலங்கையில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1978க்குப் பிறகு வந்த இலங்கை அதிபர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க மறுத்துவிட்டனர். ஆனாலும் இலங்கை சிறைகளில் தற்போது 500க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.
சிறுவர் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்றவை இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டதால் இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் மரணதண்டனையை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக வாத விவாதங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன.
இதனால் கடந்த ஜூலை 2018-ல் இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்க அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தண்டனையை நிறைவேற்றும் தேதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
43 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிபர் மைத்திரிபால சிறிசேனா மரண தண்டனைக்கு அனுமதி அளித்திருப்பதால் அளித்திருப்பதால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான பணிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.