நடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு?

நடப்பு ஆண்டில் இந்தியருக்கு நோபல் பரிசு?
Updated on
1 min read

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான இயற்பியல் விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தற்போது ராமமூர்த்தி ரமேஷ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள விஞ்ஞானிகள் பட்டியலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ராமமூர்த்தி, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் ஐ.ஐ.டி.யில் படித்த ராமமூர்த்தி, சென்னையை சேர்ந்தவர் ஆவார். பின்னர், 1987-ம் ஆண்டு அமெரிக்காவின் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பி.எச்.டி ஆராய்ச்சி மேற்கொண்டார். 2004-ம் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். காம்ப்ளக்ஸ் ஆக்ஸைடுகள் பற்றிய ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எனினும், இது ஒரு ஊகம்தான். இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒருவேளை எனக்கு நோபல் பரிசு கிடைத்தால், அதை மனித குலத்துக்கும், அறிவியல் துறைக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்” என்றார்.

இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிக்கான நோபல் பரிசு வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in