சிரியா, இராக்கை அடுத்து எகிப்தில் நுழையும் ஐஎஸ் தீவிரவாதிகள்

சிரியா, இராக்கை அடுத்து எகிப்தில் நுழையும் ஐஎஸ் தீவிரவாதிகள்

Published on

சிரியா, இராக்கை அடுத்து எகிப்தில் தங்கள் தடத்தை பதிக்க தொடங்கியுள்ளனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.மிக குறுகிய காலத்துக்குள் சர்வதேச அளவில் பெரும்அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.

முதலில் சிரியாவில் அதிபர் அல் – ஆசாதுக்கு எதிராக போராடும் ஓர் ஆயுதக் குழு என்றுதான் கருதப்பட்டது. பின்னர் இராக்கில் புகுந்து பல முக்கிய நகரங்களை கைப்பற்றிய பிறகுதான் அந்த தீவிரவாதிகளின் ஆள் பலமும், ஆயுத பலமும் உலகுக்கு தெரியவந்தது.

அடுத்ததாக அமெரிக்க பத்திரிகையாளர்கள் இருவரின் தலையை வெட்டி கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கொடூரத்தை உலகுக்கு காட்டினர்.

இந்நிலையில் அடுத்ததாக எகிப்தில் தடம் பதிப்பதற்காக பணிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே உள்நாட்டுக் குழப்பத்தால் சீரழிந்துள்ள எகிப்தில் எளிதாக தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி விடலாம் என்று ஐஎஸ் முடிவு செய்துள்ளது.

இதன் ஒருபகுதியாக அங்கு அரசை எதிர்த்து போராடி வரும் தீவிரவாத குழுவினருக்கு போர் உத்திகளை ஐஎஸ் கற்றுத் தரத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக எகிப்தில் செயல்படும் அல்-மகுதிஸ் தீவிரவாத இயக்க கமாண்டர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது: தாக்குதல் நடவடிக்கைகளை எப்படி நடத்துவது, சிறப்பான தகவல்தொடர்பை மேற்கொள்வது குறித்து எங்களுக்கு ஐஎஸ் அமைப்பினர் கற்றுத் தருகின்றனர்.

பெரும்பாலும் இண்டர்நெட் மூலம் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு ஆயுதங்களை தரவில்லை. ஆட்களையும் அனுப்பி உதவவில்லை என்றார்.

எனினும் இராக்கில் அமெரிக்க தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் எகிப்தில் நுழைந்துவிட ஐஎஸ் தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தை அடுத்து அந்நாட்டு ராணுவ வீரர்களும், இளைஞர்கள் பலரும் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, இராக்கில் போரிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எகிப்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து தெரியும் என்பதால் ஐஎஸ் தீவிரவாதிகள் எகிப்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் பொது இடத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யும் சம்பவமும் எகிப்தில் சமீபத்தில் நிகழ்ந்தது.

எகிப்தில் 2011-ம் ஆண்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. முபாரக் அடுத்து ஆட்சி அமைத்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முகமது மோர்ஸி ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு உள்நாட்டு குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. எனவே நாட்டின் பல இடங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. தீவிரவாத குழுவினர் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.-ராய்ட்டர்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in