

தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை பயன்படுத்தி இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்தினர் செல்வம் குவித்த மோசடி விவகாரத்தில் சிக்கிய இந்திய வங்கியான பாங்க் ஆப் பரோடா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு எதிர்கட்சியான ஜனநாயக கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்க அதிபராக இருந்த ஜேக்கப் ஜுமா பல்வேறு மோசடிகள் செய்தது தெரிய வந்ததையடுத்து அவருக்கு எதிராக சமீபத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். இந்த ஊழல் மோசடியில் இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்தினர், ஜூமாவுன் கைகோத்து செயல்பட்டதும் தெரிய வந்தது.
குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடந்து அவர்களை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் துபாய்க்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடந்த இந்த மோசடியில் குப்தா குடும்பத்தினருக்கு உதவியாக பாங்க் ஆப் பரோடாவில் மோசடியாக பணப் பரிமாற்றம் நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
இததொடர்பாக இந்து நாளிதழ் (ஆங்கிலம்) நடத்திய புலனாய்வு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தன. தென் ஆப்ரிக்காவில் குப்தா குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கம், அரசு ஒப்பந்தம், கட்டமான தொழில், ஊடகம் என பல துறை சார்ந்த தொழில்களிலும் மோசடிகள் செய்துள்ளனர். அதில், பெருமளவு பண பரிவர்த்தனை, தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பரக் நகரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளை மூலம் நடந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் பாங்க் ஆப் பரோடாவின் தென் ஆப்ரிக்க கிளைகளில் குப்தா குடும்பத்தின் மூலம் மொத்தம் 17,000 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவத்தின் சார்பில் அளிக்கப்படும் பில்களுக்கு எந்தவித ஆவணங்களையும் கேட்காமல், இணைய வழியில் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. எனவே இது திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் நடவடிக்கை என வங்கி விதிமுறைகள்படி கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் சிலர் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தவறான, மோசடியான பணப் பரிவர்த்தனை செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உயரதிகாரிகள் மூலம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு குப்தா குடும்பத்தினர் இந்த பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது தென் ஆப்ரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மோசடி புகாரில் சிக்கியுள்ள பாங்க் ஆப் பரோடா மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியான ஜனநாயக கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவர் நடாஷா மஸோனே கூறியுள்ளதாவது:
‘‘பாங்க் ஆப் பரோடா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நிதித்துறை புலனாய்வு மையத்தின் மூலம், சட்டப்பிரிவுகள் 29 மற்றும்் 52ன் கீழ் விரிவான விசாரணை நடத்த வலியுறுத்துவோம். சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாங்க் ஆப் பரோடா மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. இதற்காக நாங்கள் போராடுவோம்’’ எனக்கூறினார்.
இதனிடையே பாங்க் ஆப் பரோடா வங்கி, தென் ஆப்ரிக்க கிளையை மூட முடிவு செய்துள்ளது. அதேசமயம் மோசடி புகார்கள் குறித்து விசாரணை நடைபெறும் எனவும் அந்த வங்கி கூறியுள்ளது.