Published : 10 Mar 2018 10:49 AM
Last Updated : 10 Mar 2018 10:49 AM

உலக மசாலா: சூப்பர் படகு

யர்லாந்தைச் சேர்ந்த சேஃப்ஹெவன் மரைன் நிறுவனம் ‘Thunder Child’ XSV-17 என்ற படகை உருவாக்கியிருக்கிறது. அதிக அழுத்தத்தையும் மிக மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 54 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்தப் படகில் சுமார் 10 பேர் அமர்ந்திருக்கலாம். எவ்வளவு மோசமான சூறாவளியாக இருந்தாலும் படகையே திருப்பிப் போடக்கூடிய அலையாக இருந்தாலும் இது சமாளித்துவிடுகிறது. படகு கவிழ்ந்தாலும் சட்டென்று திரும்பி தன்னுடைய இயல்பான நிலையை அடைந்துவிடுகிறது. சமீபத்தில் இந்தப் படகு செயல்படுத்திக் காட்டப்பட்டது. அதில் முதல் தடவை ஆள் இல்லா படகு 180 டிகிரிக்குத் தண்ணீரில் கவிழ்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இரண்டாவது தடவை மனிதர்களுடன் மூழ்கி, மேலே வந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ராணுவத்துக்காகப் படகுகள் தயாரிக்கும் பணியில் இறங்கிவிட்டது நிறுவனம்.

பிரெண்ட்ஷிப் மட்டுமில்லை, இனி படகும் மூழ்காது!

பி

லிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏழைகள் சாப்பிடுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இங்கே ‘பக்பக்’ என்ற உணவு மூலமே ஏழைகள் தங்கள் பசியைப் போக்கிக்கொள்ள முடிகிறது. பக்பக் என்றால் குப்பையில் வீசப்படும் தேவையற்ற துணிகள், போர்வைகள் என்று அர்த்தம். அதேபோல குப்பைகளில் கொட்டும் உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவை ‘பக்பக்’ என்று அழைக்கிறார்கள். மிகக் குறைந்த விலையில் இந்த உணவு ஏழைகளால் தயாரிக்கப்பட்டு, ஏழைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளில் போடப்பட்டுள்ள சமைக்கப்படாத இறைச்சி, சமைத்து வீசப்பட்ட இறைச்சி போன்றவற்றைச் சேகரிக்கிறார்கள். அவற்றைத் தனித்தனி பைகளில் போட்டு ஏழைகள் வசிப்பிடத்துக்கு எடுத்துவருகிறார்கள். 70 ரூபாய்க்கு இறைச்சி பையைக் கொடுக்கிறார்கள். அதை வாங்கி, குப்பைகளை நீக்கி, எலும்புகளை நீக்கி, தண்ணீரில் அலசி, மசாலா, காய்கறிகள் சேர்த்து புது உணவாகச் சமைக்கிறார்கள் உணவகத்தைச் சேர்ந்தவர்கள். சோறும் இறைச்சி குழம்புமாக 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.

“எங்கள் உணவகத்துக்கு ஏழைகளே சாப்பிட வருகிறார்கள். வேலை செய்து பணம் கிடைத்துவிட்டால், அன்று உணவகத்துக்கு வர மாட்டார்கள். அவர்களே நல்ல உணவைச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வேலை இல்லாத நாட்களில் பசிக் கொடுமையைச் சமாளிக்க இங்கே வருகிறார்கள். வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட இறைச்சியில் உணவு தயாரித்தாலும் சுவையிலும் சத்திலும் குறை இருக்காது” என்கிறார் ஓர் உணவகத்தின் உரிமையாளர்.

“சாப்பிடக்கூடிய சுவையில் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த உணவைச் சாப்பிடுபவர்கள் விரைவிலேயே மரணத்தைச் சந்தித்து விடுகிறார்கள்” என்கிறார் சலோம் டிகோல்லசியன். “மறுசுழற்சி உணவு விஷத்துக்கு ஒப்பானது. இவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்து, காப்பாற்ற வேண்டும்” என்கிறார் சமூக ஆர்வலர் மெலிஸா அலிபாலோ.

ஐயோ… இந்தக் கொடுமைக்கு விடிவு வராதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x